Sunday, November 22, 2009

மனிதராய் வாழ கூச்சமாய் இருகிறது.


ஐரோப்பியர்கள் முதன் முதலாக வடஅமெரிக்காவிற்கு கப்பலில் வந்திறங்கியதை கண்ணுற்றபோது இம்மண்ணின் மைந்தர்களின் மனதில் உடனடியாக என்ன எண்ணம் தோன்றியிருக்கும்? முற்றுமுழுதாக அந்நிய தோற்றத்தைக்கொண்ட வேற்று மனிதர்களை பார்க்கின்ற போது ஆச்சரியமா, அல்லது அச்சமா, அவர்களிடம் காணப்பட்டிருக்கும்? அச்சம் மேலிட ஓடியிருப்பார்களா? அல்லது ஸ்னேகத்துடன் கை குலுக்க முயன்றிருப்பார்களா?

வெள்ளைக்காரர்கள் சொல்வது போல் தங்களை அவர்கள் கடவுளாக நம்பியிருப்பார்கள் என்று சொல்வதை நம்பமுடியாது. ஆக்கிரம்பிப்பாளர்கள் அதிகாரமுடையவர்களாக இருப்பதால் அவர்கள் பதிவே எங்களுக்கு வரலாறாக கிடைக்கிறது. தன் குழுமத்தை சாராத, முன்னம் எப்போதும் பார்த்திராத தோற்றத்தை கொண்ட மனிதர்களைக் காண்கையில் ஆச்சரியத்தை விடவும் அச்சம்தான் முதலில் தோன்றியிருக்கும்.

கனடாவின் வட புலத்தில் இருந்து அமெரிக்க கண்டத்தின் தெற்கே நடைபெறும் பண்பாட்டு விழா ஒன்றிற்காக கனடாவின் பூர்வீக மக்கள் குழுமம் ஒன்று அங்கு செல்லும் வழியில் வருடம் தோறும் மிசிசாக்காவில் இருக்கும் எரிண்டேல் பூங்காவில் கூடாரம் அடித்து தங்குவார்கள். பல நூறு ஆண்டுகால பழக்கம். குறிப்பிட்ட பாதையொன்றிலேயே போக்குவரத்து செய்யும் அவர்கள் பாதையில் எரிண்டேல் பூங்கா இருக்கிறது. மிஸிஸாக்கா என்றால் பூர்குடி மக்களின் மொழியில் மூன்று நதிகள் இணையும் இடம்மென்று பொருள். அவர்களின் இடத்தையும், இடப்பெயரையும் எடுத்துக்கொண்டு விட்டு அவர்களை இடம்பெயர வைத்துவிட்டோம்.

பல்கலாச்சார நகரில் நாங்கள் வாழ்ந்தாலும், கனடாவின் பூர்வ குடி மக்கள் எங்களுக்கு அந்நியப்பட்டுத்தான் காணப்படுகின்றார்கள். தங்கள் மண்ணை நாங்கள் ஆக்கிரமித்து விட்டோம் என்னும் வன்மமோ குரோதமோ அவர்களிடத்தில் சற்றேனும் இல்லை. புன்னகைக்கின்றார்கள். நெருங்கிச் செல்லும் போது ஸ்நேகத்துடன் கை குலுக்குகின்றார்கள். மாறாக, அப்பூங்காவுக்கு வழக்கமாக வரும் பல்கலாச்சார குடியேற்றவாசிகளிடம்தான் பதற்றமும் எரிச்சலும் காணப்பட்டதை இலகுவாக அவதானிக்க கூடியதாக இருந்தது. தாங்கள் வழக்கமாக இறைச்சி வாட்டித்தின்னும் இடத்தில், தங்கள் குழைந்தைகள் பந்து விளையாடும் திடலில் இந்த செவ் இந்தியர்கள் மூன்று நாட்களுக்கு கூடாரம் அடித்தால் நாங்கள் எங்குதான் செல்வதாம் என்னும் ஆதங்கமும் அதனால் ஏற்பட்ட பதட்டத்தையும் ஏமாற்றத்தையும் அவதானிக் முடிந்தது.

ரொராண்டோ என்பது பூர்வகுடி மக்களிள் மொழிச்சொல். சந்திப்பு என்னும் பொருள் கொள்ளும் அவர்களின் அந்தக்கால பெரு நகரம். வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பூர்வ குடி மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிக் களிக்கும் அவர்களது டொரண்டோவை நாங்கள் ஆக்கிரமித்து, இம்மண்ணின் மைந்தர்களை அந்நியர்களாக்கி விட்டிருக்கின்றோம்.

மனிதர்கள் குழுக்களாகவும் தனியர்களாகவும் நாடோடித்திரிவதைப்போல் மிருகங்களும் பிராணிகளும் பறவைகளும் கூட காடோடித் திரிபவைகளும் உண்டு. ஆறறிவுள்ள மனிதர்களைப் போலவே அவைகளும் குறிப்பிட்ட பாதையைத்தான் காடோட எப்போதும் பயன் படுத்துகின்றன என்பது ஒன்றும் புதிய தகவல் அல்ல. பூர்வ குடி மக்கள் தங்கள் உறவுகளை தேடிச் செல்லும் பாதைகள் எல்லாம் நகரங்களை நிர்மாணித்தது போல் மிருகங்கள் காடோடித்திரியம் பாதைகள் எல்லாம் கூட வீடுகளும் தொழில் பேட்டைகளும் கட்டப்பட்டு விட்டன.. தன் பாதையின் குறுக்கே தார் சாலை புதிதாய் போடப்பட்டது தெரியாமல், நகரச்சாலையில் மான்கள் தடுமாறி கிழே வீழ்வதை பார்க்கும் மனிதன், மனித நாகரீகத்தை உயர்ந்ததென சொல்வானா என நம்ப முடியாது.

ரொண்டோவின் ஹைபார்க் பகுதியில் நஞ்சூட்டப்பட்ட உணவை உண்ட ரக்கூன் பிராணிகள் அடுத்ததடுத்ததாக இறந்து போயிருக்கின்றன. செவ்விந்தியர்களைப் போல் ரக்கூனும் ரொண்டோவின் பூர்வகுடிதான். அவைகளின் வாழ்விடத்தை பறித்து நாங்கள் வீடுகள் கட்டிக்கொண்டதால் அவைகளுக்கு வாழ்விடமும் இல்லை. உணவும் இல்லை. காண்கின்ற சிறு சிறு பற்றைக்காடுகள் எல்லாம் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் ரக்கூன்கள் மனிதர்களின் உணவுக் கழிவை தின்றே உயிர்வாழப்பழகி இருக்கின்றன. மனிதர்களுக்கு எந்தவகையிலும் ஆபத்தை விழைவிக்காத இப்பிரணிகள் நஞ்சூட்டப்பட்ட உணவை உண்டதால் இறந்ததை கவலை கொள்ளாத நாங்கள்.. இரண்டு நாய்களும் அதே உணவால் இறந்ததற்காக விசாரணைக்குழுவும் துப்பறியும் குழுவும் அமைத்திருக்கிறோம்.

மற்றய பிராணிகளை விடவும் மனிதர்களின் கண்களை நேரடியாக பார்த்தது தனது மன ஓட்டத்தை சொல்லக்கூடிய சக்தி ரக்கூனுக்கிறது இருக்கிறதோ என நான் நம்புவதைப்போல.. ரக்கூனை நேரடியாக பார்த்த பல பேர், அதே கருத்தை சொல்வதை கேட்டிருக்கிறேன்.. ரக்கூனை இரண்டு சந்தர்ப்பங்களில் நாம் பார்கலாம். தெருவில், வாகன சக்கரத்தில் நசிபட்டு இறந்து கிடக்கையிலும்... உணவுக்கழிவுகள் இருக்கும் பைகளை இரவு நேரத்தில் அவைகள் பிய்த்து உண்ணும்போதும். இச்சந்தர்ப்பத்தில்தான் ரக்கூன்கள் மனிதர்களின் கண்களை மிக நேராகவும், நிதானமாகவும் பார்க்கின்றன. அதன் பார்வையில் இருக்கும் ஏழ்மையில், மனித குலத்தின் குரூரம் பட்டவர்தனமாக விமர்சிக்கப்படுகிறது. இந்தக்கழிவையாவது என்னை உண்ண விடமாட்டாயா ஏன்னும் பார்வைக் கேள்வியுடன் நிமிடங்களைக் கடந்தும் ரக்கூன்கள் நகர மறுத்து நிற்கும். அந்த கணமெல்லாம் மனிதராய் வாழ்தலுக்கு கூச்சமே வருகிறது.

-சக்கரவர்த்தி-

குருதி நிரம்பிய குடுவை


அன்றாடம் காண்கின்றோம் என்பதற்காக பல மானுட விரோத சம்பவங்களின் பாரதூரத்தை துயரத்தை, அதன் விளைவுகளை, நாம் ஏனே புரிய மறுக்க வைக்கப்பட்ருக்கிறோம். அதன் கொடூரத்தின் பாதிப்பை உணர முற்படாது இலகுவாக நாள் தோறும் தாண்டிச்சென்று விடுகின்றோம். கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதி நாள் எனக்கு அப்படி அமைந்து விடவில்லை.
பல்லாயிம் சதுரமைல் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஒன்ராரியோ வாவியின் தெற்கு கரையோரம் இருக்கும் 'கிறிம்ஸி' ஏகாந்தம்கொள்ளும் கொள்ளையழகுப் பிரந்தியம். திராட்சை தோட்டங்களால் மட்டுமே பணமீட்டும் தோட்ட பிரதேசம்.

மாலை வேளைகளில் அப்பிராந்தியத்தில் நடந்தோ அல்லது வாகனத்திலேனும் திசை கெட்டு அலைந்து திரிவதில் அத்தனை ஆனந்தம் கொள்ளும் வாழ்வு. வடக்கே ஒன்ராரியோ வாவி. மேற்கே மகரந்த மலைத்தொடர். இடைப்பட்ட இருமைல் அகலமும் முப்பது மைல் நீளமும் கொண்ட சமதரையாவும் கொடி முந்திரித் தோட்டங்களே.. சூடான காற்றை ஒருபோதும் நான் அங்கு உணர்ததில்லை, மனம் இறுகிய கணங்களையும் நான் ஒரு போதும் உணர்ந்ததில்லை, கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதித்தினம்வரை. திராட்சை அறுவடை செய்ய ஆரம்பிக்கும் முதல் நாள் அன்று எனது வாகனம் பழுதடைந்து முந்திரித்தோட்டத்தின் மத்தியில் நின்றுவிட்டது. அன்று முழுவதும் நடந்தே முந்திரிக்காடெங்கும் திரிவதென்று முடிவெடுத்து ஏகாந்தத்தை புணர்தல் செய்தேன்.

திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்கிறவர்களை பார்க்கின்ற போது முதற்தடவையாக அன்னியமும், சூழல் மாறுபாடும், தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. நாள் தோறும் காண்கின்ற சாதாரண காட்சி முதற்தடவையாக எனக்கு அன்னியத்தை ஏற்படுத்தியது. காரணம் அங்குவேலை செய்பவர்களெல்லாம் கறுப்பினத்தவர்களாக இருந்தார்கள். நான் அவர்களுடன் பேச, தயக்கத்துடன் என்னிடம் பேசினார்கள்.
'காலை ஐந்து மணிக்கு வேலை ஆரம்பமானால் இரவு எட்டுமணி வரை தொடரும். பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்துஅக்டோபர் கடைசி வாரம் வரை வாரத்தில் ஏழு நாட்களும் வேலை. பண்ணையின்ஒதுக்குப்புறமாக இருக்கும் கன்டைனருக்குள்தான், கடும் குளிரிலும், கொடும் வெயிலிலும், எங்கள் உறக்கம். ஒருகோப்பி குடிக்கவும், கூட வேலை செய்பவனிடம் சிரித்துப் பேசவும் தடை. இத்தனையையும் உறுத்து, நாங்கள் ஏழு மாதத்தில் பெறுகிற சம்பளம் - மூவாயிரம் டாலர்கள்.''எங்கள் காலில் கட்டியிருந்த இரும்புச்சங்கிலியில் இருந்து எழும்புகின்ற 'சிலீங்', 'சிலீங்' சத்தம் மட்டும் தான் இல்லாமல் போய் இருக்கிறதே தவிர. மற்றபடி அறுநூறு ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கைமாறவேயில்லை.' பல நூற்றாண்டுகால துயர்கொள்வாழ்வின் வெகிர் என் ஆன்மாவை கருக்கியது.

அந்த திராட்சை தோட்டங்களில் வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜமேக்காவிலும், கெயிட்டியிலும், மற்றய கரேபியன் தீவுகளிலிருந்தும் தற்காலிகமாக இறக்குமதி செய்யப்படுகின்ற கறுப்பினத்தவர்கள். உலகப்பிரசித்தமான நயக்கரா பிரந்தியத்தில் தயாரிக்கப்படும் செம்மதுக்குடுவைகளில் நிரப்பப்பட்டுருப்பவைகள் கறுப்பு மக்களின் குருதி என்பது மிதமான கற்பனைதான். இருந்தும் குறிப்பிட்ட இனம் ஒன்றின் மீதான முதலாளித்துவத்தின் உறிஞ்சல் சாட்சியத்துடன் காட்சிப்படுத்தப்படுகின்றது.

துப்பாக்கிகளோடு போன நாளில் இருந்து கறுப்பர்களின் இரத்த வரலாறு ஆரம்பமாகிறது. வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுகின்ற அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இருக்கின்ற நாடுகளும், தீவுகளும் சங்கிலியிட்டு
கட்டி இழுத்து வரப்பட்ட கறுப்பு அடிமைகளாலேயே செம்மை அடைந்தது என்பதுவும், வெள்ளையர்களின் உணவுத்தேவையும், கஜானா நிறைவும், கறுப்பர்களின் இரத்தமும், கண்ணீரும் என்பது வெள்ளையர் சரித்திரத்தின் கறுப்பு பக்கங்கள்.

வெள்ளையர் அரசு 1838ஆம் ஆண்டில் அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அதே அரசு, அதே ஆண்டில், ஒப்பந்த முறைச் சட்டத்தை கொண்டு வந்து, சங்கிலியால் பிணைக்காத அடிமை முறையை உலகெங்கும் பரப்பியது.

ஒப்பந்த அடிமைக் கறுப்பு கூலித் தொழிலாளிகள் அடிமை முறையில் வேலை செய்வதை நீங்கள் கோடைகாலம் முழு வதுவும் Vine Land என்று சொல்லப் படுகின்ற Niagara On the Lake பகுதிக்கு சென்றால் பார்க்கலாம்.

எழுதாத ஆங்கிலேய சட்டங்களிலும், வெள்ளைத்திமிர் இரத்தத்திலும் இன்னமும் கறுப்பர்கள் மீதான கொடும் பார்வைகள் நீங்கிய பாடாக இல்லை. அமெரிக்காவின் போலீஸ் மோப்ப நாய்கள் கறுப்பர்களை துரத்தி வேட்டையாடிப் பிடிக்க கூடிய முறையிலேயே பயிற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. இயற்கை அழிவுக்கு உட்படும் என்று தெரிந்தும் கடல் மட்டத்தை விட தாழ உள்ளது என்று பகிரங்கமான பின்னும் அலபாமா பகுதியில் கறுப்பினத்தவர்களை குடியேற்றியதும் 'கத்தரீனா' அழிவுக்குபின் அமெரிக்கஅரசு நடந்து கொண்ட விதமும்மனித குரூரத்தின் பெருநிலை.

எய்ட்ஸ் கிருமிகள் மனித குரங்கில் இருந்து வந்ததல்ல. வெள்ளையர்கள் சொல்வது போன்று அது கறுப்பர்களுக்கு கடவுள் தந்த தண்டனையும் அல்ல. எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவின் ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல் ஆயுதம். அக்கிருமியினை தடுப்பூசிகளில் புகுத்தி உதவி என்னும் பேரில் ஆபிரிக்க மக்களிடம் பரிசீலித்து விட்டது அமெரிக்கா, என்னும் குற்றச்சாட்டைச் சொன்னவர் 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கறுப்பின பெண்ணான வங்தாரி மாத்தாய். மனிதனேய அமைப்புகளும் ஐ.நா. சபையினரும் இவரது குற்றச்சாட்டை ஊர்ஜிதப் படுத்தாமல் இருப்பது கறுப்பினத்தவர் மீதான அக்கறையின்மை என்று கொள்ளலாமா?

எண்ணை வயல்களினால் நைஜ்ஜீரியாவின் சுற்றுப்புறச் சூழல் நாசமாகிக் கொண்டிருப்பதை தடுக்க முற்படும் இயற்கை ஆவலர்களை வெள்ளை முதலாளிகளின் பினாமிகள் இன்றுவரை கொன்று குவித்துக் கொண்டு இருப்பதை ஏன் பச்சைப் பாதுகாப்பு இயக்கத்தினர் பெரிதுபடுத்தவில்லை. ஆதி மனிதரை, ஆதியிலேயே நாகரிகம் கண்டவரை ஆதி அரசரை உலகின் மற்றைய குடிகள் ஏன் மதிக்க மறுக்கின்றன? அவர்கள் வாழ்விடம் இருண்ட கண்டம் என்று எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது? இத்தனையையும் செய்து கொண்டு பிப்ரவரியை கறுப்பு மாதமாக ஏன் நினைவு கூருகிறார்கள்?

சரி - கறுப்பு நிற திராவிடத் தமிழர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சென்றும், கறுப்பானாலும் கஸ்தூரியென்றும் பழமொழி சொன்னார்கள்? எங்கள் அடையாளத்தின் மீதே எங்களுக்கு மட்டமான அவிப்பிராயத்தை தோற்றுவித்தது எது?

-சக்கரவர்த்தி-